வாசி யோகத்தில் குண்டலினி மேலேறும் பதிவு

வாசி யோகத்தில் குண்டலினி மேலேறும்  பதிவு

வாசிப் பயிற்சி செய்பவர்கள் மூக்குத் துவாரங்கள் வழியாக மூச்சை உள்ளுக்கு இழுக்கும் போது ஓம் என்று மனதில் உரக்க உச்சரித்தபடி மூச்சோடு கலந்து ஓம் எனும் ப்ரணவமும் உள்ளே போவதாக பாவனை செய்து கொண்டு இழுத்து, வெளியே வராதபடிக்கு கண்டத்தினிடத்தில் மூடிவிட வேண்டும். 

அவ்வாறு செய்யும் போது என்ன நடக்கும் ? இழுத்த மூச்சானது சிறிது நேரம் நுரையீரலில் தங்கியிருக்கும். 
பிறகு அது வெளியேற எத்தனிக்கும் போது கண்டத்தினிடத்தில் மூடப்பட்டிருப்பதால், மூக்குத் துவாரங்கள் வழியாக வெளியே வர முடியாமல் தொண்டைக்குப் பின்புறம் உள்ள உணவுக் குழாய் வழியாகக் குடலுக்குள் நுழையும். 

22 அடி நீளமுள்ள குடல் முழுவதுமாகப் பயணிக்கும்.

இறுதியில் மூலாதாரம் அமைந்துள்ள குதப் பகுதியைச் சென்றடையும். அங்கு சென்ற வாயு அபானனுடன் குதம் வழியாக வெளியேற ஆரம்பிக்கும். அவ்வாறு வெளியேறினால் அது மான் தோலில் படாமல் இருக்கவே முன் காலத்தில் அதன்மேல் வெள்ளைத் துணியை விரிக்கச் சொல்வார்கள். 

இப்போது யோகியானவர் என்ன செய்ய வேண்டும் என்றால், அந்தக் காற்றானது வெளியேற முடியாதபடி மூலபந்தம் போட வேண்டும் அதாவது ஆசனவாயை இறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது குத த்தின் வழியாகவும் காற்றானது வெளியேற முடியாமல் போகும். 
குருமுகமாகப் பயிற்சி செய்யும் போது அவர் உடலில் உள்ள மற்ற துவாரங்களையும் அடைக்கும் உபாயத்தினைக் கற்றுத் தருவார்.

இப்போது அந்த மூச்சுக் காற்றானது எந்த வழியிலும் போக முடியாததால் முதுகெலும்பின் நடுவில் உள்ள துவாரத்தின் வழியாகப் போக முயற்சிக்கும். 
முதுகெலும்பில் 33 எலும்புக் கூண்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக படிப்படியாக அமைந்திருக்கும். அவற்றின் மையப் பகுதியில் வெள்ளை நரம்பொன்று இருக்கிறது. தாமரைக் கொடியில் உள்ள மெல்லிய நூலைப் போலக் காணப்படும். அதுவே சுழுமுனை நாடியாகும். 

அது அவ்வளவு எளிதில் திறந்து விடாது. அப்பியாச முதிர்ச்சியினால் மட்டுமே அதை திறக்க முடியும். அவ்வாறு திறந்து விட்டால் வாயுவோடு குண்டலினியும் மேலேறும் என்று சொல்லப்படுகிறது.
போமடா முன்சொன்ன நரம்பினூடே

பூரித்த ரவிமதியுஞ் சுடர்தான் மூன்றாம்

ஆமடா பின்னியுந் தான் கீழேபாயும்

அந்தரங்கந் தன்னைப்பார்க்க அடங்கிப்போகும்

நாமடா வெளிதிறந்து சொல்லிவிட்டோம்

நாதாந்த பரப்பிரம்ம நாட்டந் தன்னை

ஓமடா விந்துவுந்தான் அண்டஉச்சி

உறுதியுடன் சித்தமதை வூணிப்பாரே.

-காக புஜண்டர் மகரிஷி.
பூரித்த ரவிமதியுஞ் சுடர்தான் மூன்றும் என்றால் வலது நாசி, இடது நாசி இரண்டிலும் உள்ளிக்கிழுத்து நிறுத்திய மூன்று மூச்சுக் காற்றாகும். வலது மூச்சு, இடது மூச்சு, இரண்டும் கலந்த மூன்றாவது மூச்சு. இந்த மூச்சை எந்த வழியாகவும் போக விடாமல் தடுப்பதினால் அதற்கு கோபம் உண்டாகி கிளம்பி, அக்னி ஜ்வாலையைப் போவும், சிங்கக் குட்டியைப் போலவும் குதஸ்தானத்தை நோக்கி கீழ் நோக்கி பாயும். அந்த வாயுவின் உஷ்ணத்தினால் தாக்கப்பட்ட குண்டலினியானது அடிபட்ட நாகத்தைப் போல சீறிக் கொண்டு வாயுவோடு சேர்ந்து முதுகுத்தண்டில் உள்ள சுஷும்நா நாடியைத் திறந்து கொண்டு வேகமாக ப்ரம்ம கபாலத்தைப் போய் முட்டும்.

யோகத்தில் சுழுமுனை திறக்கக் கால தாமதம் ஆவதே இதனால்தான். அதாவது வேகமாக வந்து மோதும் குண்டலினியின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் வலிமை சாதகனுக்கு ஏற்பட வேண்டும் என்பதனால்தான் இயல்பாகவே கால தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு உஷ்ணத்துடன் வேகமாக வந்து குண்டலினி மோதுவதால் ப்ரம்மகாபலத்தில் உஷ்ணம் ஏற்பட்டு அங்கு உள்ள விந்து என்கிற அமிர்தமானது உருகி கண்டத்தின் வழியாக விழுந்து நாதாந்த சப்தத்தில் ஐக்கியமாகி விடும். 

இதை அடைய வேண்டி திடமனதுடன் எல்லா சாதனைகளையும் விடாமுயற்சியுடன் செய்து வர வேண்டும். அதாவது சாதனையின் வலிமையினால் மூச்சுடன் முதுகுத் தண்டு வழியாக மேலேறும் 
குண்டலினியானது வழியில் உள்ள எல்லா நாடிகளையும் கிளப்பி விடும். அப்போது நாதசப்தம் காதில் கேட்கும்.
 தவத்தின் பயனால் புலன்கள் வசப்பட்டு நிற்கும் பொழுது, அவை தன் கூர்மை அதிகரிக்கும். 

அவ்வேளையில் இது போன்ற இரைச்சல்கள், நாடிகளின் ஓசை, இதயத் துடிப்பின் ஓசை, உள்ளுறுப்புகள் செயல்படும் ஓசைகளெல்லாம் கேட்கத் துவங்கும். சிலர் இதைக் கண்டு பயம் கொள்வார்கள். பயப்படத் தேவை இல்லை. இது சாதனையின் மேம்பாட்டையே உணர்த்துகிறது. அண்டமெங்கும் ஓசை இருக்கிறது. நம் அநாதகத்திலும் ஓசை இருக்கிறது. இதை அநாதக சப்தம் என்பார்கள். 

ஒரு வெண்கலப் பாத்திரத்தின் ஒசையைத் தட்டினால், அதன் ஒலியின் அதிர்வு அந்தப் பாத்திரம் முழுவதும் பரவுவது போல, இந்த அநாகத சப்தத்தின் அதிர்வானது நம் உடல் முழுவதுமுள்ள நாடிகளில் பரவி அவற்றை இயக்குகிறது. அதன் ஓசைக்குள்தான் ஜோதியாகிய ஒளி இருக்கிறது என்றும், அந்த ஒளிக்குள்ளே சுத்த மனசு இருக்கிறது என்றும், அந்த சுத்த மனசு எதில் லயமடைகிறதோ அதுவே ஆத்மா என்றும் சொல்லப்பட்டுள்ளது. 

அனைத்தையும் சிருஷ்டித்து, காத்து, அழிப்பது தேஜோமனமாகிய சுத்த மனம். 
அந்த தேஜோ மனம் நாத ஸ்வரூபமான த்வனிக்குள் இருக்கிறது. ஓசையை காதால் கேட்கிறோம். இந்தத் தவனியை காதால் கேட்க முடியாது. ஆனால், மனதால் உணர முடியும். அதைத்தான் ப்ரணவம் என்பார்கள்.
இந்தப் ப்ரணவத்தின் அ என்ற சப்தம் இடுப்புக்குக் கீழும், உ என்ற சப்தம் இடுப்பிலிருந்து கழுத்து வரையிலும், ம என்ற சப்தம் கழுத்துக்கு மேல் சிரசிலும் ஒலித்து ஜீவனை இயக்குகிறது.

இதெல்லாம் நாதத்தின், சப்தத்தின் பெருமை. அது போல நம் சுவாசத்தின் பொழுது ஒலிக்கும் ஸோஹம் என்ற சப்தத்தில் ஸ என்பது மோட்ச நிலையான சரஸ்வதி பீஜமான நாதமாய் இருந்து சிவத்தை குறிப்படிடும். 
ஹம் என்ற சப்தம் பந்தத்தையும், சப்தத்திற்கு ஆதாரமாகிய பூதங்களைப் பொருளாகக் கொண்டு அஹம் என்ற மந்திரத்தால் ஆன்மாவைக் குறிக்கும். எனவே இந்த அஜபா மந்திரத்தை அவயக்தம் என்பர். 

இதிலிருந்துதான் அவிருக்கம், ஸூன்யம், ஸ்பர்சம், நாதம், த்வனி, பிந்து, சக்தி, பீஜம், அக்ஷரம் ஆகிய ஒன்பது நவநாதங்கள் உண்டாயின. இவையெல்லாம் ஒன்று சேர்ந்ததுதான் மத்யமா.
இந்த ஒன்பது நாதங்களும் ஆறு ஆதாரங்களிலும், ஆக்கினைக்கு நாலு விரக்கடைக்கு மேலே நாதாந்தத்திலும், அதிலிருந்து உச்சந் தலை வரை ஒன்பது இடங்களிலும் விளங்கும். 
இதைத்தான் அக்ஷர வடிவமான வைகரீ என்று குறிப்பிடுவர்.

சிரஸைப் ப்ராதானமாகக் கொள்வதும் இதனால்தான். 
சப்தத்தின் ஆற்றலால் மூளையின் நுண் பகுதிகளையும் இயக்க முடியும் என்ற அடிப்படையில்தான் மந்திரங்களை வடிவமைத்தனர். ஒலியால் அடையும் நெறி, ஒளியால் அடையும் நெறி என்று இரண்டு உண்டு. இரண்டும் கலந்ததே வாசி யோகமாகிய குண்டலினி யோகம். 

காதுகளை அடைத்து அங்கு நரம்புகளின் ஓசை எழும்படிச் செய்து பழகி வந்தால் சில மாதங்களில் காதுகளில் நாதத்வனி கேட்கும். அதில் மனம் எளிதில் லயமாகி நிற்கும். இது ஒலியால் அடையும் நெறி. புருவ மத்தியில் ஒளி கண்டு உணரும் நெறி ஒளியால் அடையும் நெறி. சைவ தெறி, சித்தர்கள் நெறி இதுதான். இரண்டில் எதைப் பின்பற்றினாலும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்று ஏற்படும். இதைப் பரையோகம் என்பர்.

மோதிர விரல்களால் இரு காதுகளையும் மூடிக் கொண்டு தியானித்து வரும் பொழுது, வயிற்றிலுள்ள ஜடராக்கினியிலிருந்து ஒரு சப்தம் உண்டாகிக் கிளம்பும். இதுவே சப்த ப்ரும்மம். இந்த சப்தத்தில் ஒன்பது வகையான பேதமுண்டு. கோஷம், காமஸ்யம், சிருங்கம், காண்டா, வீணை, புல்லாங்குழல், துந்துபி, சங்கம், மேகம் என்று ஒன்பதும், இவை எதுவுமில்லாமல் ஓங்காரமும் கேட்கும்பத்து என்றும் சொல்வதுண்டு. 

பிரம்மரந்திரத்தில் குண்டலினி புகும் பொழுது சமுத்திர ஓசை, மேக கர்ஜனை, பேரிகை சப்தமெல்லாம் கேட்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
”மணிகடல் யானை வார்குழல் மேகம்

அணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ்

தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்

பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.
கடலொடு மேகங் களிறொடும் ஓசை

அடவெழும் வீணை அண்டரண் டத்துச்

சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை

திடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே” என்பார் திருமூலர்.

ஆத்மாவின் சொரூபமானது விரிந்து விந்து, நாதமாகவே உள்ளது. சப்தம் என்ற பதத்தை பிரித்து பாருங்கள் சப்+தம் அதாவது ஏழு ஸ்வரங்களை உள்ளடக்கியது சப்தம் என்பதாம். பொருள்.
சிணிசிணி சிணீ ஸங்கு வேணு வீணாதாளம் கண்டா பேரீ ம்ருதங்க மேகநாதஹ
வேதாந்தம், சித்தாந்தம், ஆனஅந்தம் என்று சொல்வதெல்லாம் என்னவென்றால், எல்லாவற்றிற்கும் அந்தமாக இருப்பது எதுவோ அதுவே ஆதியாகவும் இருக்கிறது. இவைகள் எல்லாம் குறிப்பிடுவது ஆதியாகிய ப்ரம்மத்தையே. 

அதுவே முடிவான முடிவாகவும் துவக்கமாகவும் இருக்கிறது. ஆதி பராசக்தி என்று சொல்லி அதுவே துவக்கம் என்று சொவோர்களும் உண்டு. ஆனால், உண்மை அதுவல்ல. ஆதியானது ஆற்றல்களின் இருப்பிடம். அதுவே இருப்பு. அதுவே பேராற்றல் களம். அதன் சலனத்தில் விளைந்த சக்தியே ஆதி பராசக்தி. அதாவது பரமாகிய சிவத்தின் சலனத்தில் உருவாகிய சிவத்தின் சக்தி பராசக்தி. ஆதியின் சலனத்தில் முதலில் தோன்றியது நாதமே ஆகும். அதிலிருந்தே மற்ற எல்லாம் தோன்றின. 

நாதத்தில் ஸப்த ஸ்வரங்கள், அதன் பிறகு வெப்பத்தால் உருவாகிய ஒளியில் ஏழு நிறங்கள், சகதியின் அம்சமாக ஸப்த மாதாக்கள், நம் உடலில் ஸப்த தாதுக்கள் எல்லாம் இந்த அடிப்படையில் தோன்றியவையே.

இன்னும் நிறைய இருக்கிறது. 
இதிலே நாம் தவத்தின் மூலமாக வந்த இடத்திற்கு மேல் நோக்கி பயணப்படும் போது முடிவு அந்தமே ஆகும். அதாவது ப்ரம்மம். அப்போது பயணத்தின் பாதையில் ப்ரம்மத்தில் இருந்து முதலில் தோன்றிய நாதத்தையும் நாம் கேட்கிறோம். இதையே நாத அந்தம் அதாவது நாதாந்தம் என்பார்கள். அது ப்ரணவமாகிய ஓம் ஆகும். 

அது வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு விதமான பத்து ஸப்தங்களாகக் கேட்கும் என்கிறார்கள். புதிதாக மேல் நிலைக்கு போகிற சாதகருக்கு இந்த ஓங்காரம் காதுகளில் ஒலிக்கும் போது, இந்த பத்துவித ஸப்தங்களை ஒவ்வொன்றாகக் கேட்கும் சக்தி அவர்களுக்கு இருக்காது. காதில் ஏதோ இரைச்சல் ஏற்படுகிறது என்பார்கள். தவத்தில் மேன்மை அடைந்து வரவர ஒவ்வொன்றாகக் கேட்க வரும். அதாவது அந்த இரைச்சலால் மன சலனம் அடையாமல் மனதை அந்த ஸப்தத்திலே நிலை நிறுத்தி அதை உற்றுக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அவ்வாறு கேட்டுக் கொண்டே வரவர ஓங்காரமானது சூக்குமமாகப் பிரிந்து பத்து விதமாக ஒலிக்கும். ஒவ்வொரு ஒலியாகக் கேட்டுக் கொண்டே வரும் போது இறுதியில் ஓங்காரம் வந்து நிற்கும். அதுவே நாதாந்தம். அதற்கு ஈடான ஆனந்தம் தரும் ஒலியானது எந்த லோகத்திலும் கேட்பதற்கில்லை. சாதனையில் மேன்மை அடைந்தவர்களுக்கு
இரவில் ஓங்காரம் தெளிவாகவும் இனிமையாகவும் விதவிதமாகவும் கேட்கும். 

பகலில் பலப்பல ஓசைகள் இருப்பதால் அது கேட்காது. அதாவது கடலின் ஓசை இரவில் தெளிவாகக் கேட்பது போல, இந்த ஓங்காரமும் இரவில்தான் தெளிவாகக் கேட்கும். பகலில் ஓங்காரமாகக் கேட்கும் இரவில் விதவிதமான இனிய ஓசைகளாகக் கேட்கும். அது சிணி, சிணிசிணீ, சங்கு, வேணு, வீணா, தாளம், கண்டா, பேரி, மிருதங்கம், மேகநாதம் போன்ற சப்தங்களாக ஒலிக்கும்.

சப்தம் என்ற பதத்தை பிரித்து பாருங்கள் சப்+தம் அதாவது ஏழு ஸ்வரங்களை உள்ளடக்கியது சப்தம் என்பதாம். பொருள்.
 \\எட்டோட இரண்டு கூட்டி பத்தில் ஓளி காண்க எட்டு சூரியன் இரண்டு சந்திரன் இது அர்த்தம் என்ன அண்ணா ?\\ இது வாசி யோகத்தை உணர்த்தும் வாக்கியங்களாகும். எண்களைக் குறிக்கும் தமிழ் எழுத்துகளில் ”அ” என்பது எட்டு. ”உ” என்பது இரண்டு. ”ய” என்பது பத்து. 
அதாவது சூரியகலை, சந்திரகலை இரண்டும் கூடிய சுழுமுனையாகிய அக்கினி கலையில் தவம் செய்து பேரொளி தரிசனத்தைக் காண்க என்பது விளக்கம். 

நமது வலது கண்ணாகிய சூரியன் அகாரம் அதாவது எட்டு. இடது கண் உகாரம்(இரண்டு). புருவமத்தி யகாரம் அதாவது பத்து. புருவ மத்தியில் வாசியை நிறுத்தி தியானம் செய்து ஜோதி தரிசனத்தை காண்க என்பது பொருள்.
வாசி யோகம் என்பதே குண்டலினி யோகம்தான். மூலக் கனலை காலால்( காற்றால்) எழுப்பும் யோகம். கண்ணன் ”ய”முனையில்(சுழுமுனை) ஆடிய காலி(காற்று)ங்க நர்த்தனம் என்பது வாசி யோகம்தான். 

வாசி யோகத்தில் ஒவ்வொரு சக்கரங்களாகக் கடந்து வரும் பொழுது முதல் மூன்று சக்கரங்களைக் கடந்து மேலே ஏறுவதுதான் மிகக் கடினம். 
மணிபூரகத்தை குண்டலினி அடையும் பொழுது வசீகரம் ஏற்படும். வாழ்வின் பல படித்தரங்களில் வெற்றி வந்து குவியும். நுட்பமான புலனறிவு, சுறுசுறுப்பு, அமைதி, சித்துகள் யாவும் கிட்டும். இவைகளைக் கண்டு மோகித்து விடாமல், இவற்றை பொருட்டாகக் கொள்ளாமல் மேலும் தீவிரமாகப் பயிற்சியைத் தொடர வேண்டும். 

அப்படித் தொடரும் பொழுதுதான் நான்காவது நிலையை குண்டலினி சக்தி அடையும். அதற்குப் பிறகு ஏறுமுகம்தான். மனதிற்கு கிட்டும் ஆறுமுகம்தான். பகுத்தறிவு ஓங்கி விடுவதால் இந்த மூன்றிலும் சோதனை குறைவுதான்.
கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து குருபாதம் இருநான்கில் நாலைச் சேர்த்து

நாணாமல் ஒரு நினைவாய்க் காக்கும்போது

நாலும் எட்டும் ஒன்றாகும் நாட்டி ஊதே.
மனத்தை வேறு சிந்தனையில்லாமல் சுழு முனையில் வைத்து அக்கினிக் கலை, வித்யா விந்துக் கலைகளைக் கூட்டி இடைவிடாமல் ஒரு நினைவாய்க் காக்கும் பொழுது சூரியக் கலையாகிய பன்னிரண்டு உதிக்கும். இதை உபதேசமாகக் கொண்டு நிலைத்து நில். இதில் நாலைச் சேர்த்து என்பது வித்யா கலையான கர்மா, ஞானம், பக்தி, பிரபக்தி எனும் மகாவிஷ்ணு நிலையைக் குறிக்கும். எட்டு என்பது சிவ நிலையான யோகாக்கினி யாகும். இந்த யோகாக்கினிதான் கர்மாவை தகித்து, பக்தியிலிருந்து பிரபக்தி ஞானத்தை எட்ட உதவும். இந்த நான்கும் எட்டும் சேரும் பொழுது பன்னிரண்டு கலையாகிய சூரிய மண்டலம் அடையலாம். இதுதான் சக்தி நிலை. 

சக்தி நிலையில் சுகித்திருந்த பின்பு பதினாறு கலைகளையுடைய சந்திர கலையை அடையலாம். சந்திர கலை ஜோதிமயமானது. இதுவே ஆனந்தமயம். உலக விவகாரங்கள் எதுவும் தோன்றாது. நாம் நினைத்தால் உலகியலுக்கு வரலாம்.
மேலே குறிப்பிட்ட பாடலுக்கு மட்டுமல்ல, வாசி யோகம் குறித்து கூட பலரும் பல விளக்கங்களை முன் வைக்கிறார்கள். எனவே ஒரு மனதாக சித்தர்களை வேண்டி தவமியற்றி அவர்கள் அருளுக்கு பாத்திரமானவர்களாக ஆகி விடுவீர்களேயானால், அவர்கள் அருளால் உண்மையான வாசி குரு உங்களை வரவேற்பார் என்பது உறுதி. 

மேலே குறிப்பிட்ட படி வாசி யோக சித்தியால் சந்திர கலையை அடைந்து விட்டோமேயானால், பசி, தாகம், ஆசை அனைத்தையும் வெல்லலாம். சந்திர கலையை அடைந்து விட்டால் சில யோகிகளுக்கு இந்த தூல தேக வாழ்க்கை பிடிக்காமல் போவதுமுண்டு. அதனால்தான் அவர்கள் இந்த தூல தேகத்தை கழற்றி விட்டுப் போய் விடுகிறார்கள். இந்நிலையிலும் பல சித்திகள் கை கூடும். இதைத்தான் காமதேனு, கற்பக விருக்ஷம் என்றெல்லாம் போற்றிப் புகழ்வார்கள்.

யோகியானவர் சூரிய மண்டலத்தில் வினைத் தூய்மை பெற்ற பின்புதான் சந்திர மண்டலத்திற்குள் பிரவேசிக்க முடியும். எனவே அங்கு விதி வேலை செய்யாது. மதி மட்டுமே ப்ரகாசிக்கும். இந்த கோட்பாட்டின் படியே விதியை மதியால் வெல்லலாம் என்றார்கள். வாசி யோகத்தின் சிறப்புகள் இவ்வாறு இருக்க, பதஞ்சலி மகான் ஏன் குண்டலினி பற்றி பேசவில்லை என்ற கேள்விக்கு வருவோம்.
 பதஞ்சலி மகான் வாழ்ந்த காலத்தில் குரு உபதேசத்திலேயே மனமானது அடங்கி விடும். அந்த காலச் சூழல் அவ்வாறு இருந்தது. எனவே இது குறித்த விழிப்புணர்வின் தேவை அப்பொழுது எழவில்லை. பிறகு காலம் செல்லச் செல்ல உலகாய விவகாரங்கள் பெருகி விட்டபடியினால் மனிதனின் மனம் எளிதில் அடங்கவில்லை. 

எனவே சித்தர் பெருமக்கள் வாசி பற்றியும், குண்டலினி பற்றியும் ஆராய்ந்து வாசி யோகத்தை புகுத்தினார்கள். இது மட்டுமல்ல, பல வகையான யோகங்கள் தரப்பட்டன.
வாசி யோகத்தை பொருத்த வரை விந்து சக்தி மிகமிக முக்கியமாகும். விந்து சேமிக்கப்படும் அளவு ப்ராண சக்தி அதிகரித்து மனம் எளிதில் வசப்படும். தேஜஸ் பெருகும். புருவத்திற்கு மேலே செல்லும் பொழுது மனம் ப்ராணனாக செயல்படும். புருவத்திற்கு கீழே இறங்கி விட்டால் பிராணன் மனமாக மாறி விடும். இதுதான் சூக்குமம். அதனால்தான் பிராணனைப் பிடி மனதைப் பிடி என்பார்கள். மனதைப் பிடிப்பது எளிதன்று. அதே சமயம் ப்ராணனைப் பிடித்தால் மனம் தானே அடங்கும்....

http://shivasiddhar.org

What's Your Reaction?

like
1
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
1