சித்தியும் முக்தியும் பெற இல்லறம் தடையா ?

சித்தியும் முக்தியும் பெற இல்லறம் தடையா ?
சித்தர்கள் கூறும் பத்து சக்கரங்கள்

சித்தியும் முக்தியும் பெற இல்லறம் தடையா?

முனிவர்களின் தவத்தைக் கெடுக்க அழகிய பெண்களை அனுப்பி, தவத்தைக் குலைப்பதாக புராணம் கூறுகிறது. பெண்ணுடன் சேர்வதால் விந்து விட்டதால் யோகம் கைகூடாது. ஆகையால், பிரமச்சரியம் அவசியம் என்கிறார்கள். எனவே யோகப் பாதைக்குத் திருமணம் தடையாக இருக்குமா? 

புராணங்கள் உண்மைக் கதைகள். உண்மையின் அடிப்படையில் பலரும் பலவிதக் கதை சொல்லி உள்ளார்கள். புராணங்களின் கூற்று ஆராயப்பட வேண்டும். தவம் என்பது பலவகைப்படும். வாசி யோகமும் தவம். சிவயோகமும் தவம். அதில் “சிவயோகம்“ என்ற தச தீட்சைக் காலத்தில் மட்டுமே பெண்ணுடன் சேர்வது தவிர்க்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக முதல் மூன்று ஆண்டுகள் கடுமையாகப் போகம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த காலத்தில் விந்து நீர்த்து விடும். எழுச்சி இருக்காது. இந்தக் காலத்தில் குழந்தை பிறந்தால் அது குறைபாடுள்ள குழந்தையாகப் பிறக்கும். இதை காம தகனம் என்பார்கள். ஆகையால் சிவயோகத்தை 40 வயதிற்குப்பின் செய்ய சொல்கிறார்கள். 50 வயதுக்குள் வயதில் செய்வது நல்லது. இளவயது இல்லறம் தவம் செய்ய உதவும். சிவயோகம் செய்ய உதவும். சித்திக்குப் பின்னும் உதவும்.

"விந்து விட்டதால் யோகம் கைகூடாது” என்பதன் பொருள்.

விந்து என்பது பரிபாசை. சகஸ்ராரத்திற்கு 'விந்து' என்று பெயர். சகஸ்ராரத்தில் மனதைக் குவித்து வாசி யோகம் செய்யாவிட்டால் முழுமையான யோகச் சித்திக் கிடைக்காது என்பது பொருள்.

 சித்தர்கள் இதுப் பற்றிப் சொல்வதைப் பார்ப்போம்.

'ஆறான இல்லறமே சக்தியென்று
அமர்ந்தி திருப்பான் கோடியில் ஒருவன் தானே'
- இராமதேவர், சிவயோகம், பாடல 19/௧௯

'ஒருவனடா கோடியில் ஒருவ னுண்டு
உலகத்தோடு ஒற்று மனதறிவாய் நிற்பான்
சிறுவனடா வறுமையில்சென்று நிற்பான்
சித்தது மிகுந்தது நிற்பவன் அவனாகும்
குரு மொழியை மறவாதான் குருவேயாகும்
குண்டலியின் நந்தி ஒளி கூறுவான்பார்
திருவிருந்த பதிஅறிந்து வாலை பூசை
செவ்வியை செய்தவன்'
- இராமதேவர், சிவயோகம். பாடல் 20/௨௦
பொருள்

ஆறு உயிர்களுக்கும் மனிதர்களுக்கு நன்மை தருவது போன்று இல்லறம் சித்திக்கும் முக்திக்கும் சக்திக் கொடுக்கும் என்பதை கோடியில் ஒருவர் அறிவார், அவர் ஆறுத் தலங்களை அறிந்து சிவ யோகத்தில் வாலை பூசைச் செவ்வையாகச் செய்வார். சித்துகள் அவரிடம் இருக்கும். சிறுக் குழந்தைபோல் ஒளிவு மறைவற்ற வாழ்க்கை வாழ்வார். வறுமையில் வாழ்பவர் போல் எளிமையாக இருப்பார். சித்தர்கள் சொன்ன குரு மொழியை மறவாதவர், சாதாரண உலக மக்கள் போல் வாழ்வார். மனதை நெறிபடுத்தி அறிவின் வழியில் இயக்குவார். 

வாசி யோகத்தில் குண்டலி எழும் வகையும் அதன் மூலம் நந்தி ஒளி என்ற வாலை என்ற பூரணன் என்ற இறைவனைக் காணும் வழி சொல்வார். இவர்தான் சித்தர். 

எனவே வாசியோகம் செய்தப் பின் சிவயோகம் செய்யவும், சித்திப் பெற்று சித்தன் ஆவதற்கும், சித்தர் கல்வி சொல்லிக் கொடுப்பதற்கும் இல்லறம் சக்தி கொடுக்கும் என்று இராமதேவர் உறுதிபடச் சொல்கிறார்.