அகத்திய மாமுனிவரினால் உலகுக்கு அளிக்கப்பட மகத்தான ஹோமங்கள்

அகத்திய மாமுனிவரினால் உலகுக்கு அளிக்கப்பட மகத்தான ஹோமங்கள்

1.அகத்தியர் அருளிய “கிரக தோஷம்” போக்கும் ஹோமம்!

நண்பர்களே,  சித்தர்கள் அருளிய அபூர்வ  ஹோமங்கள் சிலவற்றை இன்று பகிர்கிறேன். ஹோமங்கள் என்றால் ஏதோ ஒரு சிலரால் மட்டுமே செய்விக்க கூடியது என்பதாகவே நம்மில் பலர் அறிந்து வைத்திருக்கிறோம். அந்த கருத்துக்களை
சித்தர் பெருமக்கள் உடைத்தெறிகிறார்கள்.

குருவருளை வேண்டி வணங்கி இந்த
ஹோமங்களை யாரும் செய்திடலாம்.
தேவையற்ற செலவு பிடிக்கும் காரியம்
எதுவும் இதில் இல்லை. அந்த வகையில்
முதலாவதாக நவகிரகங்களின் பாதிப்புகளில் இருந்து நீங்க உதவும் ஹோமத்தைப் பற்றி பார்ப்போம்.

சோதிட இயலில் நவகிரகங்களின் பாதிப்புக்கு உள்ளாகாத சாதகர்களே இருக்க முடியாது. இந்த பாதிப்புகளின் தீவிரத்தை தணித்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு பரிகாரங்களும் கூறப்பட்டிருக்கிறது. பெரிய பொருட் செலவில் செய்யும் பரிகாரங்கள் மட்டுமே தேவையான பலனைத் தரும் என்பது
மாதிரியான ஒரு கருத்தோட்டம் நம்மில்
பரவியிருக்கிறது. செலவு பிடிக்காததும் அதே நேரத்தில் நல்ல பலனைத் தரக்கூடியதுமான ஒரு ஹோம முறையினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"காணவே இன்னமொரு கருமானங்கேள்
கருணைவளர் புலத்தியனே கருணை கூர்ந்து
பேணவே ஓமகுண்டம் நன்றாய்ச் செய்து
பிலமான அக்கினியை லரசால்செய்து
பூணவே புவனையுட மந்திரந்தன்னால்
புத்தியுடன் எள்ப்பொரிகொண்
டோமாமம்பண்ணு
தோணவே கிரகமதில் நின்றதோஷந்
சுத்தமுட நீக்குமடா நித்தம்பாரே"
                               - அகத்தியர் -

என்கோண வடிவத்தில் ஹோம குண்டம்
ஒன்றினை அமைத்து, அதன் முன்னர் ஹோமம் செய்பவர் கிழக்குமுகமாய் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் குருவினையும், குலதெய்வத்தினையும் வணங்கிய, அரச மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில் தீ வளர்க்க வேண்டும் என்கிறார்.

இந்த தீயை வளர்க்கும் போது அக்கினியின்
மூல மந்திரத்தை சொல்லியவாறே தீயை
உருவாக்க வேண்டும் என்கிறார். அக்கினியின் மூல மந்திரம் பின் வருமாறு.

"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே
அகோரா அங் உங் இங் வாவா லம் பட்
சுவாகா"

தீயை நன்கு வளர்த்த பின்னர் அடுத்த கட்டமாக “புவனை”யின் மந்திரமாகிய "ஓம்
ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும்
ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி
பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா" என்ற
மந்திரத்த்தை உச்சரித்தவாறே எள் பொரியினை நெருப்பில் இட வேண்டும் என்கிறார். இந்த மந்திரத்தை 1008 தட்வை உச்சரித்து எள் பொரியினை நெருப்பில் போட நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும் என்கிறார் அகத்தியர்.

                *********

2.அகத்தியர் அருளிய “புத்திரபாக்கியம்” தரும் ஹோமம்!

திருமணமான பலர் தங்களுக்கு புத்திரபாக்கியம் தள்ளிப் போவதைக் கண்டு மனம் வெதும்பி வாடுவதைப் பார்த்திருக்கிறோம். இன்றைய நவீன அலோபதி மருத்துவம் எத்தனையோ உயரங்கள் வளர்ந்து இக் குறையினை நிவர்த்திக்க நல்லபல தீர்வுகளைத் தந்திருக்கிறது.

எனினும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய
ஒரு காலகட்டத்தில், குழந்தையின்மைக்கான தீர்வாக அகத்தியர் இந்த ஹோமத்தினை முன்வைக்கிறார். இதன் சாத்திய, அசாத்தியங்கள் ஆய்விற்கும், விவாதத்திற்கும்
உட்பட்டவை.

இந்த ஹோமத்திற்கு நாற்கோண வடிவத்திலான ஹோம குண்டத்தினை பயன்
படுத்திட வேண்டும். ஹோமம் செய்பவர்
கிழக்கு முகமாய் அமர்ந்து செய்திடல்
வேண்டும். கணவணும், மனைவியும்
ஒருங்கே அமர்ந்து செய்தால் இன்னமும்
சிறப்பு. இந்த ஹோமத்தினை எவ்வாறு
செய்திட வேண்டுமென்பதை அகத்தியர்
பின்வருமாறு விளக்குகிறார்.

சித்ததான சித்துகளுக் குறுதியான
சிவசிவா புவனைதிரு மந்திரந்தன்னை
பத்தாசை வைத்து மன துறுதிகொண்டு
பாலுடன் சந்தனமொடு தேனுங்கூட்டி
சுத்தான மனம்நிறுத்தி யேகமாகி
கருத்தாய்நீயும் சிறப்புட னோமம்பண்ண
வத்தாத பாக்கியசந் தான பாக்கியம்
வளருமடா ஒன்றுபத்தாய் மனங்கண்டாயே.
                                   - அகத்தியர் -

கருங்காலி மரம் மற்றும் நாவல் மரத்தின்
குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில்
தீயை வளர்க்க வேண்டும். தீ வளர்க்கும்
போது அக்கினியின் மூலமந்திரத்தை
உச்சரித்து வரவேண்டும்.

அக்கினியின் மூலமந்திரம்...
"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே
அகோரா அங் உங் இங் வாவா லம் பட்
சுவாகா"

தீ நன்கு எரிய துவங்கிய பின்னர் புவனையின் மந்திரத்தைச் சொல்லி பசும்பால், சந்தனம், தேன் கலந்த கலவையினை நெருப்பில் விடவேண்டும் என்கிறார். இந்த முறையில் புவனையின் மந்திரத்தை 1008 தடவைகள் சொல்லிட வேண்டுமாம். புவனையின் மூல மந்திரம்.

"ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும்
கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி
பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா"
இப்படி செய்தால் புத்திரபாக்கியம்
இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்கிறார் அகத்தியர். ஹோமம் செய்த மறு மாதமே கரு உண்டாகி பத்தாம் மாதத்தில் மகப்பேறு சித்திக்குமெனவும் கூறுகிறார். இந்த ஹோமத்தினை யாரும் இதை வீட்டில் செய்யலாம் என்கிறார் அகத்தியர்.

                  ********

3.நீண்ட ஆயுளைத் தரும் ஹோமம்!

மனிதராய் பிறந்த அனைவருமே நல்ல
ஆரோக்கியத்துடனும்,நீண்ட ஆயுளுடனும்
வாழ விரும்புகின்றோம். நல்ல உடல் ஆரோக்கியமே நீண்ட நாள் உயிர்வாழ்வதற்கு ஆதாரமாய் அமைகிறது. இதற்கெனவே வாழ்வின் பெரும்பகுதியை செலவிடுகிறோம் என்பதும் உண்மை. உடலைப் பேண பல்வேறு வழி வகைகள் இருந்தாலும், அகத்தியர் ஹோமம் செய்வதன் மூலம் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்கிறார். அதுவும் முன்னூறு ஆண்டுகள் வாழ முடியுமென்கிறார்.

நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா
என்று கேலிபேசி ஒதுக்குவதை விட இதன்
பின்னால் ஏதேனும் சூட்சுமங்கள் பொதிந்திருக்கிறதா என ஆராயலாம். அகத்தியர் இந்த ஹோம முறை பற்றி
பின்வருமாறு விளக்குகிறார்.

"ஆமப்பா நெற்பொரியுந் தேனுங்கூட்டி
தானென்ற டோமமது அன்பாய்ச்செய்தால்
நாமப்பா சொல்லுகிறோ முன்னூருண்டு
நன்மையுடன் தானிருப்பாய் நயனம்பாரு
தாமப்பா நயனமென்ற தீபந்தன்னை
சதாகாலம் பூரணமாய்த் தானேகண்டால்
வாமப்பால் மந்திரகலை வாமபோதம்
வாமம்வளர் புவனையைநீ மகிழ்ந்துகாணே"
                              - அகத்தியர் -

முக்கோணம் வடிவத்தை உடைய ஓமகுண்டம் ஒன்றினை அமைத்து அதன் முன்னர் ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். ஹோம குண்டத்தில் ஆலமரக் குச்சிகளைக் கொண்டு அக்கினி வளர்க்க வேண்டும் என்கிறார். அக்கினி வளர்க்கும் போது அக்கினிக்குறிய மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என சொல்லி தீ வளர்க்க வேண்டும் என்கிறார்.

நன்கு வளர்ந்த தீயில் நெற்பொரியும், தேனும் கலந்து போட வேண்டும் என்கிறார். அப்போது புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டுமென்கிறார். இப்படி 1008 முறைகள் செய்திட வேண்டுமாம்.

இந்த ஹோமத்தை ஒரு மண்டல காலத்திற்குள் நூறுமுறை செய்யும் ஒருவருக்கு நீண்ட ஆயுளும், மகா சக்தியான
புவனையின் தரிசனமும் கிட்டும் என்கிறார்
அகத்தியர். மேலும் நம்பிக்கை உள்ள எவரும்
இந்த ஹோமத்தை வீட்டில் செய்யலாம்
என்கிறார் அகத்தியர்.

                *********

4.யாரிந்த புவனை? அகத்தியர் அருளிய 
புவனையின் அருளைப் பெறும் ஹோமம்!

புவனை அன்னையின் அருளைப் பெறும் ஹோமம் பற்றி ஒரு ரகசியம் உண்டு. மகத்துவமான மந்திரத்துக்கு உரிய
தெய்வமான புவனை பற்றிய ஒரு சிறிய
அறிமுகத்தை தந்து அவளின் அருளைப்
பெறும் முறையினை பகிர்ந்து இதில் பகிர்ந்து  கொள்கிறேன். சித்தர்கள் வணங்கிய தெய்வங்களின் ஒன்றான
வாலைத் தெய்வத்தினைப் பற்றி முந்தைய
பதிவுகளில் பகிர்ந்திருந்தேன். வாலை
என்பவள் குழந்தை வடிவத்தையுடைய
தெய்வம். வாலையை பூசிக்காத சித்தர்களே
இல்லையெனலாம். 

புவனை அம்மன் என்பவள் இந்த புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம் குழந்தையின் அம்சமென்றால், புவனை அவளின் தாய் அம்சம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இந்த தெய்வம் உருவமில்லா உருவத்திற்கு சொந்தமானவள். இந்த அன்னையின் அனுசரனையின்றி ஏதும் நடவாது என்பதும் சித்தர்களின் கூற்று. இந்த மகா சக்தியின் அருளினை ஒரு ஹோமம் மூலம் பெற முடியுமானால் எத்தனை ஆச்சர்யமான விஷயம்.

அத்தகைய ஹோமம் பற்றி அகத்தியர்
பின்வருமாறு கூறுகிறார்.

"பாரப்பா யின்னமொரு பாகங்கேளு
பத்தியுடன் கோதுமைகொண் டோமம்பண்ண
வீரப்பா கொண்டதொரு அபமிருத்து
மெஞ்ஞான பூரணத்தால் விலகும்பாரே
நேரப்பா அபமிருத்து விலகித்தானால்
நினைத்தபடி முடிக்கவண்ணம் நிசந்தான்பாரு
காரப்பா கருணைவளறர் புவனைதன்னால்
கண்காண இன்னம்வெகு கடாட்சமே"
                               - அகத்தியர் -

இந்த ஹோமத்திற்கு வட்ட வடிவ ஹோம
குண்டத்தை பயன் படுத்த வேண்டுமாம்.
ஹோமத்தினை செய்பவர் கிழக்கு முகமாய்
அமர்ந்திட வேண்டும். ஹோம குண்டத்தில்
அரச மரத்தின் குச்சிகளை இட்டு தீ வளர்க்க
வேண்டும், அப்படி தீ வளர்க்கும் போது
அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம்
கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற
மந்திரத்தை கூறிட வேண்டும் என்கிறார்.

தீ வளர்ந்த பின்னர் அதில் கோதுமையை
போட்டுக் கொண்டே புவனையின் மூல
மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும்
சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை
பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தினை சொல்லிட வேண்டும் என்கிறார். இப்படி 1008 தடவை மந்திரம் சொல்லி கோதுமையைப் போட புவனை அம்மனின் அருள் கிட்டும் என்கிறார்.

அத்துடன் நன்மைகள் பலவும் சித்திக்கும்
என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை
வீட்டில் எவரும் செய்யலாம் என்கிறார்.
நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.

                **********

5.பாவம் போக்கி, செல்வம் தரும் ஹோமம்!

பாவச் செயல்களை செய்வதன் மூலமாய்
ஒருவன் தன் வாழ்க்கையில் சம்பாதிக்கும்
பாவங்களின் வகைகளை அகத்தியர் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.

"காணவே யின்னமொரு சூட்சங்கேளு
கருணையுட னுலகத்தோ டிருக்கும்போது
பூணவே கண்ணாரக் கண்டபாவம்
புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்
பேணவே காதாரக் கேட்டபாவம்
பெண்வகைகள் கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக் கொன்ற பாவம்
ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே"
                                - அகத்தியர் -

வாழும் காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும்
பாவச் செயல்களை பார்ப்பதால் உண்டாகும்
பாவம், தவறென அறிந்தும் செய்கின்ற
செயல்களினால் உண்டாகும் பாவம், தீயவைகளை கேட்பதனால் உண்டாகும் பாவம், பெண்களுக்கும், பசுக்களுக்கும் கொடுமை செய்வதால் ஏற்படும் பாவம், உணவிற்காக பிற உயிர்களை கொல்வதால் உண்டாகும் பாவம் என பாவத்தின் வகைகளை பட்டியலிடுகிறார்.

இப்படி நாம் சேர்த்த கோடிக் கணக்கான
பாவங்களை நீங்கிட வழியொன்று இருப்பதாக அகத்தியர் கூறுகிறார்.

அதென்ன வழி... அதனை அகத்தியர்
மொழியிலேயே பார்ப்போம்.

"ஒழியாத பாவமெல்லா மொழியமைந்தா
உனக்குறுதி சொல்லுகிறே னுண்மையாக
வழியாக ஓமகுண்டம் நன்றாய்ச்செய்து
சுழிவாக ஆலரசு சமுத்துதன்னால்
சுத்தமுட னக்கினியை வளர்த்துமைந்தா
தெளிவாகச் சொல்லுகிறேன் நன்றாயக்கேளு
மார்க்கமுடன் புவனையுட மந்திரந்தன்னால்
சிவசிவா நவதானியங்கொண் டோமஞ்செய்யே"
                     - அகத்தியர் -

மேலே சொன்ன பாவங்கள் எல்லாம் தீர்ந்திட, ஐங்கோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து அதில் ஆலமரம், மற்றும் அரசமரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம்
கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற
மந்திரத்தைச் சொல்லி வளர்த்திட வேண்டும். தீ நன்கு வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லியவாறு நவதானியங்களை தீயில் இட வேண்டும். இந்த முறையில் 1008 தடவை மந்திரம் சொல்லி நவதானியத்தை போட வேண்டும் என்கிறார்
அகத்தியர்.

"நீசெய்யடா சிறந்தஓமமது தீர்க்கமாக
தீராத பாவமெல்லாந் தீருந்தீரும்
மெய்யடா பிரமையொடு சகலரோகம்
விட்டுவிடும் யெக்கியஓ மங்கள்செய்தால்
மய்யமென்ற புருவநடு உச்சிமீதில்
மகத்தான கற்பூர தீபந்தன்னால்
அய்யனே உனதுடைய சமூகங்கண்டால்
அனுதினமுஞ் செல்வபதி யாவான்பாரே"
                                   - அகத்தியர் -

இப்படி இந்த ஹோமத்தினை தொடர்ந்து
மூன்று நாட்கள் செய்து வர தீராத பாவமெல்லாம் தீருமாம், அத்துடன்
மனக்குழப்பமும் சகல நோய்களும் தீருமாம்.
இப்படி மூன்று நாளும் சிறப்பாக செய்து
முடித்தால் ஹோமம் செய்தவனின் புருவ
மத்தியில் ஒரு ஒளி தென்படுமாம். அந்த
ஒளியைத் தரிசித்தால் அவன் எப்போதும்
செல்வ சிம்மானாக வாழ்வான் என்கிறார்
அகத்தியர்.

                    *********

6.300 வயதுவரை வாழவைக்கும்
ஹோமம்?

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமில்லை என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று. இருந்தாலும் சித்தர் பெருமக்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக நமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. எப்படி அத்தனை காலம் வாழ்ந்தார்கள் என்கிற உபாயங்களும் நமக்கு சித்தர்களின் பாடல்களில் கிடைத்திருக்கிறது.
ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன்
முன்னூறு வயது வரை வாழலாம் என்கிறார்
அகத்தியர். இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத்
தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். வாருங்கள் அகத்தியரின் மொழியில் அந்த ஹோமம் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

"அறிந்துகொண்டு புவனையுட
மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே"
                             - அகத்தியர் -

அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம்
செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டுமாம்.

தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும்
சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை
பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள்
செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம்.
அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம்
அதாவது 96 நாட்கள் செய்து வர 300
வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார்
அகத்தியர்.

நம்பிக்கையும், ஆர்வமும், அவசியமும் உள்ளவர்கள் குருவருளை வேண்டி முயற்சித்துப் பார்க்கலாமே!

              *********

7.அகத்தியர் அருளிய நோய் தீர்க்கும் ஹோமம்!

நோய் தீர்க்கும் ஹோம முறை ஒன்றினை
அகத்தியர் அருளியிருக்கிறார். எந்த
மாதிரியான நோய்களுக்கு இந்த ஹோமம்
பயன் தரும் என்கிற தகவல் பாடலில்இல்லை. எனினும் பொதுவான தேக ஆரோக்கியம் வேண்டுவோர் செய்து பயனடைந்திடலாம் என கருதுகிறேன். இந்த ஹோமம் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

"பாரப்பா யின்னுமொரு சூட்சுமந்தான்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
பேணவே ஓமகுண்டம் சிறப்பாய்ச் செய்து
நலமான அக்கினியை லரசால்செய்து
பூணவே புவனையுட மந்திரந்தன்னால்
புத்தியுடன் பலாசுகொண் டோமாமம்பண்ணு
வீரப்பாயு ன்னைபிடித்த நோய்களோடு
வெகுநூறு பிணிகளெல்லாம் விலகுந்தானே"
                               - அகத்தியர் -

அறு கோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து அதில் அரச மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்க்க வேண்டும். வழமை போல அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்க்க வேண்டும் என்கிறார்.

நன்கு வளர்ந்த தீயில் புவனையின் மூல
மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும்
சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை
பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே பலாசு மரத்தின் குச்சிகளை போட வேண்டும் என்கிறார். இந்த பலாசு மரத்திற்கு புரசு என்ற வேறொரு பெயரும் உள்ளது. இப்படி ஆயிரத்தி எட்டுத் தடவைகள் மந்திரம் சொல்லி பலாசுக்
குச்சிகளைப் போடவேண்டும் என்கிறார்.

இப்படி செய்வதன் மூலம் இந்த ஹோமத்தை
செய்தவரை பீடித்திருக்கும் நோய் விலகுவதுடன் எதிர்காலத்தில் பல வகையான நோய்களும் அண்டாது என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தை எவரும் செய்து பலனடையலாம்.

ஆதாரம்:- அகத்தியர் சௌமிக சாகரம் நூல்

#shivasiddhar